Sunday, December 30, 2012

எட்டு வை மக்கா! கடல் இசை விமர்சனம்

வணக்கம் நண்பர்களே! நான் பொதுவாகவே இசையை மிக ரசிப்பவன். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பாடல்களை கேட்டு கொண்டு இருப்பேன். இளையராஜாவும் பிடிக்கும், ஏ.ஆர்.ரகுமானையும் ரொம்ப ரசிப்பேன்.



சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமானின் "கடல்" படப் பாடல்களை கேட்டேன். முதல் பாடல் வெளியீடு எம்-டிவி அரங்கத்தில் நடந்தேறியது. வித்தியாசமாக ஏ.ஆர்.ரகுமான் தனது குழுவினருடன் அந்த பாடலை ரசிகர்களுக்கு வழங்கினார். "நெஞ்சுக்குள்ள" என தொடங்கும் அந்த பாடல் முதன்முறை கேட்கையிலேயே ரம்மியமாக இருந்தது. முழு இசை தொகுப்பு பின்னர்தான் வெளியானது.

இளையராஜாவின் "நீதானே என் பொன்வசந்தம்" தந்த மயக்கத்திலிருந்து இன்னும் மீளாத சமயம். இளையராஜா, மெட்டுக்களை புதிதாக போட்டாலும், சில வழக்கமான நுணுக்கங்களை அல்லது வழிமுறைகளை கையாள்வார். அது அவரது தனித்துவம், அது ரசிக்கும் படியாகவும் இருக்கும். உதாரணமாக, NEP "சாய்ந்து சாய்ந்து" பாடலில், பல்லவியின் "விழியோடு விழி பேச"   என்னும் வரியும், சரணத்தின் "ஆள் யாரும் பார்க்காமல்" என்னும் வரியும் ஒரே மேட்டுடையதாக இருக்கும். அதாவது சரணத்தையும் பல்லவியைப் போல முடிப்பது. இந்த மாதிரி பல பாடல்களில் இளையராஜா பயன்படுத்தியிருக்கார். NEP இசை தொகுப்பில் இதைப் போல் நிறைய பழக்கப்பட்ட வழிமுறையை பார்த்தேன். நன்றாகவும் இருந்தது.

பின், "கடல்" முழு இசை தொகுப்பையும் கேட்டேன். ஒரு மாதிரியாக வித்தியாசமாக இருந்தது. என்ன சொல்வதென்று தெரியவில்லை. Facebook-இல்  நண்பர்கள் கருத்துகள் எதுவும் காணோம். அனைவரும் என் நிலைமையில் தான் இருப்பர் என்று எண்ணிக் கொண்டேன்.

இது ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு ஒன்றும் புதிதல்ல. வழக்கத்தை மீறினால் புரிவது கடினம் தான், ஆனால் நாம் அந்த மெட்டை பிடித்து விட்டால் அவ்வளவு தான், அந்த இசை நம் மனதில் நீங்கா இடம் பிடித்து விடும். கடல் பாடல்களும் அதே போல் தான். இதோ, கடல் பாடல்கள் பற்றிய என் கருத்துக்களை இங்கு பகிர்ந்துள்ளேன். உங்கள் கருத்துக்களை பின்னூட்டம் இடுங்கள்.

1) நெஞ்சுக்குள்ள ஓம்ம முடிஞ்சிருக்கேன்
கிராமத்து பொண்ணு பாடுற காதல் பாட்டு. ஆரம்பத்தில் சொன்னது போல் ரம்மியமான பாடல். எம் டிவியில் கேட்டதை விட இசை தொகுப்பில் சிறிது இரைச்சல் கூட இல்லாமல் பரிசுத்தமாக இருந்தது. "காச நோய் காரிகளும் கண்ணிமைக்கும் வேளையிலே ஆச நோய் வந்து மக அர நிமிசம் தூங்கலியே..."

2) ஏலே கீச்சான்
ஏ.ஆர்.ரகுமான் பாடியிருக்கும் பாடல். நாயகன் மற்றும் நண்பர்கள் சேர்ந்து பாடும் பாடல். இந்த பாடல் சாதாரணமாக எல்லோருக்கும் பிடித்து விடும். ரெண்டாவது சரணம் முதல் சரணத்திலிருந்து மாறுபட்டு இருக்கு. துள்ளலாக இருக்கு. கேட்டு பாருங்கள். "வாலே கொண்டாலே கட்டு மரம் கொண்டாலே குண்டு மீன அள்ளி  வரக் கொண்டாலே"

3) சித்திரை நிலா
இந்த பாடலைப் பிடிக்க கொஞ்சம் நேரம் ஆகும். மிக மெதுவாக அமைதியாக ஆரம்பிக்கும் பாடல். இது எனக்கு மிகவும் பிடித்த பாடல். VTV  "ஆரோமலே" பாட்டு மாதிரி மெதுவாக ஆரம்பித்து வேகம் எடுக்கும். இந்தப் பாடல் திறமைகளின் குவியம். ஏ.ஆர்.ரகுமானின் மனதை வருடும் இசை, வைரமுத்துவின் தன்னம்பிக்கையூட்டும் வரிகள், விஜய் யேசுதாசின் கணீர் குரல் அனைத்தும் சேரும் சங்கமம். "எட்டு வை மக்கா ... எட்டு வச்சு ஆகாசம் தொட்டு வை மக்கா... புதைக்கின்ற விதையும் முயற்சி கொண்டால்தான் பூமியும் கூட தாழ் திறக்கும்".

4) அடியே அடியே
இந்த மாதிரி ஒரு பாடலை நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள். புதுமை. நிதானமான மெட்டு, மிகுந்த மேற்கத்திய வாடை, ஆனால் வரிகள் முழுவதும் பேச்சு வழக்குடன் செறிந்த கிராமத்து மணம். இந்த கலப்பு முற்றிலும் புதிது. கேட்க கேட்க அந்த மெட்டு நம்மை கட்டிப் போடுகிறது. தனித்துவமான பாட்டு. "பள்ளங்குழி பாத புரியல ஒன்ன நம்பி வாரேனே... இந்த காட்டுப்பய ஒரு ஆட்டுக்குட்டி போல ஒம்பின்ன சுத்துறேனே... அடியே அடியே என்ன எங்க நீ கூட்டிப்  போற ..."

5) மூங்கில் தோட்டம்
பியானோ இசை தான் ரிதம் என்று நினைக்கிறேன். மெல்லிய காதல் பாடல். பத்தாததுக்கு ஹரிணியின் வசீகரிக்கும் குரல். MSV-ஓட பழைய பாடல்கள் ஞாபகம் வருது. "பௌர்ணமி இரவு... பனி விழும் காடு... ஒத்தையடி பாத... உன்கூட பொடி நட... இது போதும் எனக்கு இது போதுமே..."

6) அன்பின் வாசலே
இயேசு பற்றிய தெய்வீக பாடல்கள்...  orchestra இசை மாதிரி ஒரு மெட்டு. வித்தியாசமான பாட்டு. படத்துடன் பார்கையில் அநேகமாக இன்னும் பிடிக்கும் என நினைக்கிறேன்.

7) மகுடி மகுடி 
Party Song. Beats நன்றாக இருக்கு. நடுவில் சின்மயி குரல் பேசுகிறது. ஆம், பாடவில்லை, பேசுகிறது. நன்றாகத்தான் இருக்கு.

Kadal Musix Box


சரி நண்பர்களே... உங்கள் கருத்துக்களை பின்னூட்டம் இடுங்கள். ஸ்டார்ட் மியூசிக் :)