Monday, May 4, 2009

சோமாலியா கடற்கொள்ளையர்கள்


சமீபகாலமாக அரபிக் கடல் பகுதியில் ஏடன் வளைகுடாவில் சரக்கு கப்பல்கள் கடத்தப்படுவது அதிகரித்து விட்டது. சோமாலியா கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தான் சர்வதேச அளவில் இப்போது பரபரப்பான செய்தி. இந்திய கடற்படையினர் அதிரடி தாக்குதல் நடத்தி, கடற் கொள்ளையர்களின் கப்பலை மூழ்கடித்த செய்தி வெளியான பின், அலுவலகம் முதல் டீ கடை வரை இதுபற்றிய விவாதங்கள் தான் சூடு பறக்கின்றன. கடற்கொள்ளை பற்றியும், அதன் பின்னணி குறித்தும் பல முக்கியமான தகவல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வரத் துவங்கியுள்ளன.

நிலையான அரசு இல்லை:
கடற்கொள்ளையர்கள் வசிக்கும் சோமாலியாவில் கடந்த 1991ல் இருந்து முறையான தேசிய அரசு எதுவும் இல்லை. "தடி எடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள்' என்ற ரீதியில், ஆயுதம் வைத்திருப்பவர்களின் ராஜ்யம் தான் இங்கு கொடி கட்டி பறக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு ஏராளமான கும்பல்கள், கப்பல்களையும், ஆயுதங்களையும் வாங்கி குவித்துள்ளன. இதை வைத்துக் கொண்டு ஏடன் வளைகுடாவில் செல்லும் கப்பல்களை தாக்கி, மிரட்டி கடத்தி வருகின்றனர்.மிகப்பெரிய தொகையை பிணையத் தொகையாக பெற்று, சுகபோகமாக வாழ்ந்து வருகின்றனர். சோமாலியாவின் பிரதான தொழிலே கடற்கொள்ளை தான்.

பிசி'யான பகுதி:
கடற் கொள்ளையர்களுக்கு மற்றொரு சாதகமான விஷயமும் உள்ளது. ஏடன் வளைகுடா பகுதி தான், உலகிலேயே மிகவும் "பிசி'யான கப்பல் போக்குவரத்து நடக்கும் பகுதி. இந்திய பெருங்கடலையும், செங்கடலையும் இணைக்கும் பகுதி என்பதால், ஏராளமான சரக்கு கப்பல்கள், தினமும் இந்த பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும். இந்தப் பகுதி வழியாக தினமும் குறைந்தது ஒரு இந்தியக் கப்பலாவது செல்வது வழக்கம். இவற்றில் பெரும்பாலானவை எண்ணெய் பொருட்களை ஏற்றிச் செல்பவை.

இந்தியர்களுக்கு அதிக பாதிப்பு ஏன்?:
கப்பல் கடத்தல் பற்றிய செய்திகள் வெளியாகும் போதெல்லாம் அதில் இந்தியர்கள் தான் அதிகம் பாதிப்பிற்குள்ளாவதாக தெரிய வருகிறது. இதற்கு காரணம், கப்பல் துறை பற்றிய பயிற்சி பெற்றுள்ள இந்தியர்களுக்கு சர்வதேச அளவில் அதிக கிராக்கி உள்ளது. அதிகமான சம்பளம் கிடைப்பதாலும், பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த சரக்கு கப்பல்களில் இந்தியர்களே அதிகம் பணி புரிகின்றனர். சர்வதேச அளவிலான கப்பல் போக்குவரத்தில் அதிகாரிகள் மட்டத்தில் பணிபுரியும் இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும் 27 ஆயிரம். இது தவிர, சரக்கு ஏற்றுபவர், சுத்தம் செய்பவர் என்று தொழிலாளர் மட்டத்தில் 55 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள் பணிபுரிகின்றனர். இதனால், கப்பல் கடத்தப்படும் போதெல்லாம், அதில் இந்தியர்கள் இடம் பெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், "இந்தியாவில் கப்பல் போக்குவரத்து குறித்து பயிற்சி பெற்றவர்களுக்கும், அது தொடர் பான கல்வி கற்றோருக்கும் சர்வதேச அளவில் நல்ல மதிப்பு உள்ளது. இந்தியர்கள் திறமையாக பணியாற்றுவர் என்ற நம்பிக்கையும் உள்ளது. இதனால், கப்பல் போக்குவரத்தில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது' என்றன.

கொள்ளையர்களை பிடிப்பதில் பிரச்னை:
சோமாலியா கடற் கொள்ளையர்களை பிடிப்பதற்கும், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் ஏராளமான இடையூறுகள் உள்ளன. அனைத்து நாடுகளும் கடற் கொள்ளையர் ஒழிப்பு முயற்சியில் சாதாரணமாக இறங்கி விட முடியாது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில், "சோமாலியாவில் அரசு மாற்றத்துக்கு உதவிய நாடுகளுக்கு மட்டுமே, அதன் கடல் பகுதிக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது' என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல நாடுகள் கடற் கொள்ளை தடுப்புப் பணியில் ஈடுபட முடியாத நிலை உள்ளது. இந்த சுதந்திரத்தை பயன்படுத்தி கடற் கொள்ளையர்கள் தங்கள் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்திக் கொண்டே செல்கின்றனர்.

ஆபத்துக்கு உதவுவதில் சிரமம்:
ஏடன் வளைகுடாவில் யேமன் கடல் எல்லையில் இருந்து, சோமாலியா வரை உள்ள 950 கி.மீ., தூர பகுதிகளில் தான் கடல் கொள்ளை ஜாம் ஜாம் என நடக்கிறது. இந்த பகுதியில் கப்பல் போக்குவரத்தை பாதுகாக்கும் பொறுப்பு, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த மேற்கத்திய கடல் கண்காணிப்பு குழுமத்திடம் உள்ளது. இந்த நாடுகளைச் சேர்ந்த போர்க் கப்பல்கள் இங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இங்கு வேறுநாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் கடத்தப்படும் போது, மேற்கண்ட நாடுகளின் போர்க் கப்பல்களிடம் இருந்து உதவி பெறுவது மிகவும் சிரமமாக உள்ளது என்கிறார், இந்திய கப்பல் கழகத் தலைவர் ஹஜாரா.

மேலும் அவர் கூறியதாவது: இந்தியக் கப்பல்கள் கடத்தப் படும் சூழ்நிலை ஏற்படும்போது, கப்பலின் கேப்டன் உடனடியாக அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள கப்பல்களுக்கு தகவல் தெரிவிப்பார். ஆனால், அவர்கள், "எந்த நாட்டு கப்பல், கப்பலில் என்ன சரக்கு இருக்கிறது, கப்பலில் இருப்பவர் கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்'என அடுக்கடுக்காக கேள்வி கேட்பர். இந்திய கப்பல் எனக் கூறினால், "உடனடியாக உங்களுக்கு உதவமுடியாது' என தெரிவித்து விடுவர். இந்த கால அவகாசத்தை பயன் படுத்தி கடற் கொள்ளையர்கள் கப்பலை கடத்திச் சென்று விடுவர். இதுபோன்ற பிரச்னைகளை தடுக்க, ஐ.நா., தலைமையில் அமைதிப்படை ஒன்று ஏற்படுத்தப் பட வேண்டும். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கடற்படையினரை இதில் ஒருங்கிணைத்து கடற் கொள்ளையை தடுக்க வேண்டும். சர்வதேச கப்பல் போக்குவரத்து கழக கூட்டத்தில் இதுபற்றி இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு ஹஜாரா கூறினார்.

அமெரிக்காவும் வலியுறுத்தல்:
தொடரும் கடற் கொள்ளை விவகாரம் பற்றி அமெரிக் காவும் தனது கவலையை தெரிவித்துள் ளது. அமெரிக்க கடற்படை அதிகாரி மைக் முல்லேன் இதுபற்றி கூறுகையில், "சோமாலியா கடற் கொள்ளையர்களை பிடிக்கும் விவகாரத்தில் பல குழப்பமான சட்ட விதிமுறைகள் உள்ளன. எனவே, கடற் கொள்ளையை தடுத்து, கொள்ளையர்களை தண்டிக்க தேவையான சட்ட வரைமுறைகளை உருவாக்க வேண்டும். இதுகுறித்து ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா வலியுறுத்த உள்ளது. அனைத்து நாடுகளும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்' என்றார்.

சவுதி கப்பலுக்கு நூறு கோடி:
கடற் கொள்ளையை தடுக்க சர்வதேச நாடுகள் எந்த அளவுக்கு தீவிரமாக களத்தில் இறங்கினாலும், கடற் கொள்ளையர்களின் அட்டூழியம் சிறிதளவும் குறையவில்லை. தொடர்ந்து தங்கள் வேலையை அவர்கள் செய்து கொண்டுள்ளனர். தற்போது கூட "சீரியஸ் ஸ்டார்' என்ற சவுதி அரேபியாவின் மிகப் பெரிய எண்ணெய் கப்பலை அவர்கள் கடத்தி, தங்கள் பிடியில் வைத்துள்ளனர். இந்த கப்பலில் 20 லட்சம் பேரல் எண்ணெய் உள்ளது. கப்பல் ஊழியர்களும் கொள்ளையர்களின் பிடியில் உள்ளனர். இந்த கப்பலை விடு விக்க வேண்டுமெனில், "நூறுகோடி ரூபாய் வேண்டும்' என கொள்ளையர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து கடற் கொள்ளையர் களில் ஒருவராக தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட ஒருவர், தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "சவுதியைச் சேர்ந்த கப்பல் நிறுவனத்திடம் பேச்சு நடத்தி வருகிறோம். பேச்சுவார்த்தை என்ற பெயரில் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. 10 நாட்களுக்குள் நூறு கோடி ரூபாய் தந்தால் கப்பலை விடுவிப்போம்' என கூறியுள்ளார்.

ஜப்பான் கப்பலுக்கு எவ்வளவு?:
கடந்த செப்டம்பர் மாதம் "ஸ்டால்ட் வாலோர்' என்ற ஜப்பான் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு கப்பலை கடற் கொள்ளையர்கள் கடத்தினர். இதில் இருந்த ஊழியர்களில், கப்பல் கேப்டன் உட்பட 18 பேர் இந்தியர்கள். கப்பலையும், ஊழியர்களையும் விடுவிக்க ஜப்பான் நிறுவனத்தோடு, கடற் கொள்ளையர்கள் இரண்டு மாதங்களுக்கு மேல் பேச்சு நடத்தினர். கடந்த வாரம் பெரும் தொகை கைமாறியதைத் தொடர்ந்து, கப்பலையும், ஊழியர்களையும் கொள்ளையர்கள் விடுவித்தனர். கடற் கொள்ளையர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் எதுவம் வெளியாகவில்லை. கோடிக் கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
*இந்திய கடற்படைக்கு சுதந்திரம்:* கடற் கொள்ளையர்களின் கப்பலை, இந்திய கடற்படையைச் சேர்ந்த ஐ.என்.எஸ்., தபார், சமீபத்தில் அதிரடித் தாக்குதல் நடத்தி கடலுக்குள் மூழ்கடித்தது. இதையடுத்து, இந்திய கடற்படைக்கு, ஏடன் வளைகுடா பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்துவதற்கு சிறிதளவு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்திய கடற்படை கப்பல் சர்ச்சைக்குரிய அந்த பகுதியில் மேலும் 12 கடல் மைல் தொலைவுக்கு தனது கண்காணிப்பு பணியை நீட்டிக்க முடியும்.

பிரச்னைக்கு தீர்வு என்ன?: சோமாலியா கடற் கொள்ளையர்களை ஒழிக்கும் நடவடிக்கை தொடர்பாக, சமீபத்தில் தான் சர்வதேச நாடுகள் ஒருமித்த கருத்தை தெரிவித்துள்ளன. பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்து சர்வதேச கப்பல் போக்குவரத்து ஆர்வலர்கள் கூறியதாவது: சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் ஐ.நா., தலைமையில் பல்வேறு நாடுகளின் கடற்படையினர் அடங்கிய ஒருங்கிணைந்த படைப் பிரிவு, நிரந்தர பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும். கூடுதல் போர்க் கப்பல்கள் அங்கு நிறுத்தப்பட வேண்டும். கடத்தப்படுவது எந்த நாட்டு கப்பலாக இருந்தாலும் சரி, உடனடியாக அதை மீட்கும் முயற்சியில் களம் இறங்க வேண்டும். சட்ட விதிமுறைகளை சுட்டிக் காட்டி, மீட்புப் பணியை தாமதப்படுத்துவது சரியாக இருக்காது. கடற் கொள்ளையர்களை பிடித்து, தண்டிக்க தேவையான சட்ட வரைமுறைகளை உருவாக்க வேண்டும். இதற்கான முயற்சிகளை ஐ.நா.,வும், சர்வதேச சமுதாயமும் உடனடியாக துவங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஆச்சரியத்தில் திளைக்கும் சோமாலிய மக்கள்:
கடற் கொள்ளையர்களின் புண்ணியத்தில் சோமாலியாவின் சின்னஞ் சிறு கிராமங்களில் கூட சர்வ சாதாரணமாக கரன்சிகள் புழங்க துவங்கியுள்ளன. சிறிய நகரங்களில் கூட, காபி ஷாப், இன்டர்நெட் கபே, ஜவுளிக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கடத்தப்படும் கப்பல்களை விடுவிக்க கோடிக்கணக்கில் பணம் பெறுவதால், கொள்ளையர்கள் தங்களிடம் உள்ள பணத்தை வாரி இறைக்கின்றனர். பல ஆண்டுகளாக உள்நாட்டு கலவரத்தாலும், முறையான அரசும் இல்லாமல் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வரும் சோமாலியா மக்கள், இந்த காட்சிகளை ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் பார்க்கின்றனர்.

கொள்ளையர்களுக்கு செம வாழ்வு தான்:
கப்பல் நிறுவனங்களை மிரட்டி பறித்த பணத்தையெல்லாம், தங்கள் மனம் போன போக்கில் செலவழிக் கின்றனர் கடற்கொள்ளையர்கள். விலை உயர்ந்த கற்களால் கட்டப் பட்ட சொகுசு பங்களாக்களை கட்டுவது, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல ஆடம்பர கார்கள் வாங்குவது ஆகியவை இவர்களது பொழுதுபோக்கு ஆகிவிட்டன. அழகான பெண்களை திருமணம் செய்து கொண்டு, மகிழ்ச்சியுடன்
வாழ்ந்து வரும் இவர்கள், சாப்பாட்டிலும் குறை வைக்கவில்லை. மேற்கத் திய உணவு வகைகளை சமைப்பதற்காக, பிரத்யேகமான சமையல்காரர்களையும் வேலைக்கு வைத்துள்ளனர். எல்லாம், பணம் படுத்தும் பாடு.

நன்றி தினமலர்.

3 comments:

Vishnu - விஷ்ணு said...

நல்ல பகிர்வு தான்.

Anand said...

நன்றி விஷ்ணு.

ummar said...

கேடு கெட்ட ஜென்மங்கள்